HOME தியானத்தின் வெற்றி GURUJI SPEECH உள்ளம் பெருங்கோயில் பக்தியின் சிறப்பு பக்தியும் கோயிலும் BOOKS STICKERS  
 

"தியானத்தின் வெற்றி"

தியானத்தில் இறை அன்பு இருக்கிறது
தியானம் நமது வாழ்க்கையை இனிதாக்கும்
தியானம் கஷ்டங்களைப் போக்கிவிடும்
தியானம் என்பது பகவானை அடிக்கடி நினைப்பது - ஆனால்
தியானம் செய்பவரின் நோக்கம் மற்றவர்களையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும்.

தியானம் என்றால் என்ன?

  தியானம் என்பது, கண்களை மூடாமல் மனம், உணர்வு, அறிவு இம்மூன்றும் இணைய இடைவிடாமல் பகவானை நினைப்பது, மந்திரங்கள் கூறி துதிப்பது.

தியானம் செய்யும் முறை:

காலை நேர பூஜை:
 
காலை நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் நீங்கள் தயாராவது மிகவும் உயர்ந்ததாகும். அப்படி முடியாவிட்டால் 5 மணி முதல் 5.30 மணிக்குள்ளாவது தயாராகி விடுங்கள். இந்த நேரம் தான் தேவர்கள் நம்மை வாழ்த்தும் நேரம் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
 
எண்ணத்தால் நீங்கள் குளித்து, ஆடைகள் அணிந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். மூலஸ்தானத்தில் உள்ள பகவானை குளிக்க வைக்க பால், சந்தன நீர், பன்னீர், தண்ணீர் தயார் செய்து வைக்க வேண்டும்.
 
முதலில் பால் அபிஷேகம், பிறகு சந்தன நீர், பன்னீர் என்று செய்து தண்ணீரால் குளிப்பாட்டி விட வேண்டும். பிறகு மகாராஜாவின் ஆடை போன்று உயர்ந்த ஆடைகள் உடுத்திவிட வேண்டும். சிம்மாசனத்தில் அமர வைக்க வேண்டும்.
 
இரத்தினம், வைரம், வைடூரியம் பதித்த கிரீடம் தலைக்கும், அலங்கார அணிகலன்களை மார்பு மற்றும் கைக்கு அணிந்து விட வேண்டும். பிறகு காலடியில் பூப்போட்டு.
 
ஓம் நமசிவாய வாழ்க! ( அ ) ஓம் நமோ நாராயணாய வாழ்க!
ஓம் சச்சிதானந்தம் வாழ்க!
ஓம் சற்குரு நாதா வாழ்க வாழ்க!
என்று மந்திரம் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.
   
  ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நானென் றிருந்து நலனழிந்தேன் பூரணமே           -  பட்டினத்தார்.
   
 
நமது உடலில், உள்ளத்தில் வாழும் இறைவனைப் பற்றி பட்டினத்தார் கூறுகிறார். இதனால் உங்கள் சாதனை என்ற பயிற்சியை முதலில் அலங்காரம் செய்து முடித்தவுடன் அவருக்கு அழகான மாலை ஒன்றை மானசீகமாகப் போடுங்கள்.
   
 
பகவானின் காலில் விழுந்து வணங்குங்கள். பிறகு கைகூப்பி மந்திரம் கூறி பகவானை சுற்றி வாருங்கள். இதை அடிக்கடி செய்து பழகி வாருங்கள். மனக்கண் முன் கொண்டு வந்து நீங்கள் செய்வதை நீங்களே பார்க்க வேண்டும்.

நடைமுறை வாழ்கையில் தியானம்:

  இறைவனுக்கு முகவும் பிரியமானவர்கள் தொண்டு செய்யும் பக்தர்கள்தான் என்பதை பகவான் பலமுறை கீதையில் கூறியிருக்கிறார். இதனால் நம்மால் இயன்றவரை எல்லோரும் பகவானை நினைத்து, துதித்துவழிபட அவர்களுக்கு நாம் வழிகாட்டியாக வாழ வேண்டும்.
   
  "தன்னை தயார் செய்து கொண்டால்தானே
மற்றவர்களை நாம் தயார் செய்ய முடியும்".
   
 
பொதுவாக மனம் என்பது சும்மா இருக்காது. எதையாவது பார்த்து கற்பனை செய்து கொண்டிருக்கும், எதையாவது கேட்டு அதன் வழியில் மனம் எங்கோ போய்க் கொண்டிருக்கும், மற்றவர்களிடம் எதையாவது பேசிக் கொண்டிருக்கும். தேவையற்ற கற்பனையில் மிதக்கும்.
   
 
இப்படிப்பட்ட மனதை சிறிது நேரம் உங்கள் புத்திக் கூர்மையால் பகவானை நினைக்க வைக்க வேண்டும். இதற்கு பகவானின் உருவப்படமாகிய சிவபெருமான், கிருஷ்ணர் போன்றவைகளை வழிபடுவது சிறப்பாகும்.
   
 
இதற்காக நீங்கள் தனிமையாகப் போக வேண்டியது இல்லை. உதாரணமாக நீங்கள் சினிமாப் பார்த்துக் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். சிறிது நேரம் மனதை நிறுத்தி பகவானை நினைத்து விட வேண்டும்.
   
 
இப்படி அடிக்கடி செய்து வந்தால் தியானத்தின் முதல் நிலைத் தகுதியை நீங்கள் பெறுவீர்கள். அதனால் உங்கள் சிந்தனைகள், பேச்சுக்கள், செயல்கள் யாவும் நல்லதை நோக்கிச் செல்லும்.
   
 
நமது வீட்டில் இரவு நேரத்தில் பேன் ஓட வேண்டும். விளக்கு எரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அதே நேரத்தில் மின்சாரம் இல்லை என்றால் switchஐ போட்டு என்ன செய்ய முடியும்?
   
 
இதைப் போன்றுதான் நமது உள்ளத்திற்கும், மனதிற்கும் மின்சாரம் போன்றது "மந்திரம்". அதோடு மனதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் நிறுத்தி பகவானை நினைக்க வைக்கும் அங்குசம் என்ற switch தான் "மந்திரம்".
   
 
ஒரு பெரிய விருந்து செய்ய எல்லா பொருள்களும் இருந்தும், உணவு சமைக்க அந்த அடுப்புக்கு துவக்கம் ஒரு தீப்பொறிதான். அது இல்லாவிட்டால் சமையலும் இல்லை. சாப்பாடும் இல்லை. இதைப்போன்றுதான், "தியானம் கூடி வர மந்திரம் மிக முக்கியம்" - என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
   
  மந்திரம் தான் நம்மை மகத்தானவர்களாக்கும்.
மந்திரம் தான் காரிய வெற்றியளிக்கும் கடவுள்.

ஓய்வு நேரத்தில் தியானம்:

 
நமது உள்ளம் நாம் வைக்கும் எண்ணத்தைப் பொருத்துதான் இருக்கிறது. ஒரு குளிர்சாதனப் பெட்டியில் நல்ல பொருள்களை வைத்தால் அது நிறைய நாட்கள் நல்லதாகவே இருக்கும். ஆனால் அழுகிப்போன, நாற்றமான குப்பையில் போட வேண்டியதைக் கொண்டு போய் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது எப்படி நியாயமாகும். இதைப் போன்றுதான் நாம் நல்ல சிந்தனைகளோடு ஓய்வு நேரங்களில் இறைவன் சார்ந்த கருத்துக்கள் யாவையும் பத்திரமாக உள்ளத்தில் வைத்து அசைபோட்டுப் பார்க்க வேண்டும்.
   
 
மனம் சில நேரங்களில் சூறாவளி, புயல் போன்று சுழற்றி நம்மை அடிக்கும். அப்பொழுது ஆத்திரம் எங்கிருந்துதான் வருமோ தெரியாது. அப்படி வந்து உங்களை அலைக்கழிக்கப் பார்க்கும்.
   
 
இந்த நேரத்தில் பகவானின் நினைப்பை முடிக்கி விடவேண்டும். மந்திரம் சொல்ல ஆரம்பித்து விட வேண்டும். அடிக்கடி நம் மனதில் இறை நினைப்பு இருக்கிறதா இல்லையா என்ற சோதனையை நாம் நடத்திப் பார்க்க வேண்டும்.
   
 
குறிப்பிட்ட தூரம் வரைதான் மேலே போகும் பொருளை பூமி தன்பக்கம் இழுக்கும். அதற்கு மேலே போனால் அது மிதக்கும். பூமிக்கு இழுக்கும் சக்தி இருக்காது.
   
 
இதைப்போன்றுதான் நமது குற்றங்களைக் கண்டறிந்து பகவானிடம் கெஞ்சிக் கேட்டு சரணாகதியும், தியாகமும் நமக்குள் வரப் பெற்றவுடன் நம்மை மாயை என்ற ஈர்ப்பு சக்தி ஒன்றும் செய்ய முடியாது. ஆத்மா பிரகாசமாகி விடுகிறது. முயன்றவர், நம்பிக்கை உள்ளவர் உறுதியாக வெற்றி பெறுவர்.

தியானத்திற்க்கு தயாராகும் முறை:

   
 
அதிகாலை எழுந்திருக்கும் போதே, ' இறைவா இன்றைய நாள் உங்களை இடைவிடாது நினைக்கும் நாளாக இருக்க அருள் செய்யுங்கள் என்று கேட்க வேண்டும்.
   
 
அடுத்தபடியாக மந்திரம் கூறுவதை வேகப்படுத்த வேண்டும்.
   
 
எந்த வேலைகளைச் செய்தாலும் பகவானின் நினைப்பு, மந்திரம் கூறுதல், உள்ளத்தில் ஒடிக் கொண்டே இருக்கப் பழக வேண்டும்.
   
 
உடனே இவைகளை நடைமுறைப்படுத்த முடியா விட்டாலும் தொடர்ந்து முயன்றால் வெற்றி பெறுவீகள்.
   
வெற்றிக்கான சாதனங்கள்

ஒரு செயலைத் துவங்கும்போது தனது மனக்கோயிலில் பகவானிடம் கூறிவிட்டு அவர் ஆசிர்வாதத்தோடு துவங்குவது.

நீங்கள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் மானசீகமாக பகவானிடம் மண்டியிட்டு நன்றி தெரிவிக்க வேண்டும்.

பிரச்சனைகள் வருகின்ற போது மந்திரம் கூறுவதையும், தியானப் பயிற்சியையும் வேகப்படுத்த வேண்டும். இதனால் துன்பங்கள் உடனே மறைந்துவிடும்.

- பகவத் கீதை