ஒம் நமச்சிவாய வாழ்க வாழ்க    ஒம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க    ஒம் சற்குருநாதர் திருவடிகளே சரணம் சரணம்
 HOME  ABOUT US  ARTICLES GALLERY  CONTACT US  
 
Login
Email
Password  
 
Registration  |   Forgot Password
Links
ஆத்ம லாபம்
இந்து மதம்
உருவ வழிபாடு
ஞானிகளின் கருணையே கோயில்
பக்தியும் கோயிலும்
மன வலிமையும், தன்னை உணர்தலும்
நல்வழிப்படுத்திக் கொள்ள
எண்ணம் போல் வாழ்வு
சுயமதிப்பீடு செய்தல்
நமது லட்சியங்கள்
  Home » Links

சுயமதிப்பீடு செய்தல்

பராக்கிரமம் செய்ய முடியாததை
உபாயம் செய்து முடித்துவிடும்

எளிமை, பொறுமை, தூய்மை, விடாமுயற்சி இன்நான்கும் நம்மிடம் இருக்குமேயானால் இறைவன் நமது உள்ளத்தை விட்டுப் போகவே மாட்டார். அவருக்குப் பிடித்த அன்பைப் பெருக்கி அவர்மேல் பேரன்பு வைத்துவிட்டால் இறைவனோடு இணைந்து வாழலாம் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள், தடைகள் அனைத்தையும், இறைநம்பிக்கையோடு வாழ்பவர்களின் தூய ஆற்றல் நிச்சயம் வென்றுவிடும்.

பூமியில் பிறந்ததே இறைவனை அடைவதற்காகவே என்ற தத்துவத்தை உணர்ந்து அறிந்ததால்தான் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் போன்றவர்கள் கோயில் கோயிலாகச் சென்று இறைவனைப் பற்றி பாட்டியற்றி பரவசமடைந்திருக்கின்றனர். மற்றவர்கள் உயர்வு பெற வழிகாட்டியிருக்கின்றனர்.

நாம் அந்த அளவிற்கு போக வேண்டியதில்லை. காலம் மாறுவதற்கு ஏற்றாற் போல் இறைவனும் தியான பயிற்சியையும், அவரை அடையும் முயற்சியையும் புதிய சிலபஸாக மாற்றியமைக்கிறார். வண்டிகட்டி மாடுபூட்டி பயணம் செய்தவர்கள் இன்று காரில் செல்லவில்லையா! காலமும் அவரே! மாற்றமும் அவரே.

பழனி, திருப்பதி போன்ற கோயில்களில் அன்றாட வரவு என்ன என்று உண்டியலை பிரித்து எண்ணிப்பார்த்து விடுவர். ஆனால் இறைவனோ பணத்தை எண்ணிப்பார்ப்பதில்லை. அங்குவரும் பக்தர்களின் மனத்தை எண்ணிப் பார்க்கிறார். அதில் நல்ல ஆன்மா இருப்பதை தன் பக்கம் இழுக்க நல்ல குருநாதனின் தொடர்பைக் கொடுத்து விடுகிறார்.

இறைவனின் பக்கம் நாம் ஈர்க்கப்பட வேண்டுமானால் நம்மைப்பற்றி நாம் சுயமதிப்பீடு செய்தல் வேண்டும். நல்லவைகளை நாம் வைத்திருக்கிறோமா? அல்லது பின்பற்றுகிறோமா? அத்துடன் கெட்டவைகள் நம்மிடம் எது அதிகமாக கலந்து இருக்கிறது என்றெல்லாம் அன்றாடம் மனதில் போட்டு சலித்துப் பார்க்க வேண்டும்.

கெட்டது எது நம்மிடம் இருக்கிறதோ அதைப்பற்றிய விண்ணப்பம் எழுதி உங்கள் உள்ளே இருக்கும் இறைவனிடம் கொடுக்க வேண்டும். பிறகு பாருங்கள் கெட்டவைகள், கெட்ட குணங்கள் யாவும் படிப்படியாக மறைந்துவிடும்.

முதலில் உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை அதிகப்படுத்த கெட்டவைகளை நாம் ஒவ்வொன்றாகக் கண்டறிந்து விலக்க இறைவனிடம் மன்றாட வேண்டும்.
பொதுவாக நாமாகவே ஒரு பழக்கத்தைத் துவக்கிவிட்டு அதை விடுவதற்கு மனோதத்துவ டாக்டரை அணுக வேண்டியிருக்கிறது. இது நமக்குத் தேவையானதா!

எல்லாம் வல்ல இறைவனை தனக்குள்ளே, உள்ள மானசீகக் கோயிலில் பார்த்து பரவசமடைந்து வருபவர்களுக்கு வெயிலில் போட்ட ஐஸ் கட்டிபோல் கெட்டவைகள் கரைந்தோடிவிடும்.

பேசும்போது நல்லவைகளைப் பேச முயற்சிக்க வேண்டும். கெட்டவைகளைப் பார்க்க கண்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. கெட்ட விசயத்தை யாராவது பேசும்போது மனதில் மந்திரம் சொல்ல ஆரம்பித்துவிட வேண்டும். 'பிறர் குற்றம் பார்ப்பதை நிறுத்திவிட்டு தன் குற்றம் கண்டு நீக்க வேண்டும'.

இதையெல்லாம் நாம் செய்து வரும்போது நம்மை நாம் படிப்படியாக உயர்த்திக் கொண்டே செல்கிறோம். உங்கள் மகள் கணக்குப் பரீட்சையில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்துள்ளாள் என்றால் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். மற்ற பாடங்களில் 99, 98 என்றாலும் மகிழ்ச்சிதான். ஆனால் ஒரு கெட்ட பையனுடன் சுற்றுகிறாள் என்றால் எப்படியிருக்குமோ அதைப் போன்றதுதான் நம்மிடம் அறிவு இருந்தும் பக்தியிருந்தும் கெட்ட பழக்கங்கள் ஒட்டிக் கொண்டிருப்பது.
இதனால் 'தன்னை அறிவதே அறிவு' என்ற பொன்மொழியை உணர்ந்து பார்க்க வேண்டும். அன்றாடம் நாம் பேசியவற்றில் எவ்வளவு தவறுகள் வந்துள்ளது. பிறரைப் புண்படுத்தினோமா, எங்கெங்கே ஆணவம் நிறைந்த பேச்சு வந்தது என்று நாம் ரீவைண்டிங் செய்து (திரும்ப திரும்ப போட்டுப்) பார்த்து திருத்திக் கொள்ள வேண்டும்.

நமது திறமையால் மட்டும் நம்மை மாற்றிவிட முடியாது. இதற்கும் இறைவனிடம் கெஞ்ச வேண்டும். பிறகுதான் காலைப்பொழுது சூரியன் உதயமாவதுபோல் நம்மில் ஞானப்பிரகாசம் தோன்றும்.

கடந்துபோன காலமும் நேரமும் மீண்டும் திரும்பி வராது என்பதால் தயதுசெய்து உங்கள் லட்சியத்தை நோக்கி அனுதினமும் முன்னேறிக்கொண்டே செல்லுங்கள்.

நமது நேரத்தையும் காலத்தையும் பயனுள்ள வழியில் செலவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் வருந்த நேரும். அடிக்கடி நமது முழு கவனத்தை நம்மை நோக்கி திருப்ப வேண்டும். பொதுவாக உலக மக்களிடம் அதிகமாக ஒட்டிக் கொள்ளக்கூடாது.

நாம் எந்தப் பொருள்களின் மேலோ, மனிதர்களின் மேலோ பற்று வைத்தால் அவர்களால் துன்பப்பட நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள். பொதுவாக நீங்கள் நல்லபடியாக இருக்க வேண்டுமானால் உங்களிடம் உள்ள கெட்டவைகள், குறைகள் ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே வந்து முடிவில் அது காணாமல் போய்விட வேண்டும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களையே நீங்கள் உற்று நோக்க வேண்டும். இறைவனை மறவாதிருக்க வேண்டும்.

எங்கே உண்மையான ஆர்வமும் ஏக்கமும் இருக்கின்றதோ அங்கே கடவுள் தம்மைத்தாமே தோற்றுவித்துக் கொள்கிறார் என்று சீரடிபாபா அனுபவபூர்வமாகக் கூறியிருக்கிறார். பொதுவாக ஒருவர் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் கடவுளை அறிந்தவர் முன் உண்மையிலேயே மங்கி விடுகிறார்.

இதனால் மனவலிமையினாலும், நம்மை நாம் சுயமதிப்பீடு செய்து திருத்திக் கொள்வதாலும் தியானமும், தவமும் எளிமையாகச் செய்து உயர்ந்த நிலைக்கு வந்துவிட முடியும்.

இறை நம்பிக்கை என்னும் தங்க மோதிரத்தில் பதிக்கப்பட்ட வைரம்தான் தியானமும் தவமும்.

தியானப் பயிற்சி என்பது குருவின் உதவியால் உள்ளத்தில் கோயில் எழுப்பி இறைவனைப் பூஜிப்பதாகும்.

அனுதினமும் உங்கள் மனம் இறை நாட்டத்திலேயே இருக்க வேண்டும். கார் ஓட்டுனர் எப்படி பாட்டு கேட்டுக் கொண்டே கார் ஓட்டுகிறாரோ அதைப் போன்று இறைவனை நினைத்துக் கொண்டே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்.

 
Designed By profitideal web design and hosting company
© 2007 Dhuraimurugar Marabu Sitthaanda Dhiyana Sabai