எப்பொழுதுமே இன்பமாக இருக்க ஒரு பொருள் இருக்கிறதா ?
இருக்கிறது. அதுவே இறை நம்பிக்கை, இறை நினைப்பு.
மனம் இறைவனை நினைக்க மறுக்கிறதே அதற்கு என்ன செய்வது ?
மனக்கோயில் கட்டி அங்கு அடிக்கடி இறைவனை பூசிக்க வேண்டும்.
இதனால் என்ன நன்மை கிடைக்கும் ?
மன வலிமை கிடைக்கும்.
மனம் வலிமை பெற்றால் நமக்கு என்ன லாபம் ?
பல துறைகளில் சாதனையாளராக விளங்குவீர்கள். மனம் சார்ந்த பெரிய நோய்கள் வராது. முக்தியும் கிடைக்கும்.
இறைவனின் திருவடிகளைத் தியானித்து இறை உணர்வுடன் சரணடைகின்ற எவரொருவரும் எக்காலத்திலும் இருள்மயமான துன்பங்களில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள். இது முற்றும் உண்மை.
பொதுவாக நமது ஐம்புலன்கள் வழியாக மனம் வெளியில் செல்வதைக் தடுக்கத்தான் மனக்கோயில் கட்டி அடிக்கடி இறைவனை உள்ளே வைத்து பூசிக்க வேண்டும் என்று மரபு அறிந்த ஞானிகள் கூறி வந்துள்ளனர். இதற்கு உதாரணமாக பூசலார் வரலாறு இருக்கிறது. அதாவது சோழ மன்னன் கட்டிய கோயிலுக்கு இறைவன் செல்லாது பூசலார் மனதில் இறை உணர்வால் கட்டிய மனக்கோயிலுக்கு இறைவன் சென்றார். இதனால் பூசலாருக்கு மனக்கோயில் கட்டிய மாணிக்கம் என்ற புனை பெயர் வந்தது.
இவ்வாறு உள்ளே உணர்ந்து பூசிக்கும் போது நமது மனம் அறிவுடன் சார்ந்து தெளிவு பெறும். அதாவது பாலில் சீனிபோட்டு குடிப்பதற்கு ஒப்பாகும். அதேபோல் உப்பும் சீனியைப்போல் வெள்ளையாகத்தானே இருக்கிறது என்று பாலில் போட்டால் பால் முறிந்துவிடும் அல்லவா ? இதைப்போன்றுதான் கண்டதையெல்லாம் மனதில் போட்டுக் குழப்புவார்கள்.
நமது மனம் நம்முன் இருக்கும் இறைவனை சந்தித்து வலிமை பெற பல பயிற்சியின் வாயிலாக முயலுவதே தியானம் ஆகும். இந்த உணர்வு பயிற்சியின் வாயிலாக மனம் வலிமை அடைந்துவிட்டால் நல்ல எண்ணங்கள் யாவும் வெற்றிச் செயலாக மாறும். அறிவும் அறியாமையும் கலந்ததே மனம். இதில் அறியாமையைப் பிரித்து எடுக்க தியானம் வேண்டும். பிறகு அறிவுடன் உள்ள மனம் வலிமை பெறுகிறது.
'வலிமையாகச் சிந்திக்கும் போதுதான் மனம் வலிமை பெறுவதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் தேவையற்ற எண்ணங்களிலிருந்து விடுதலையடைந்த மனம்தான் வலிமையானது என்பதே உண்மை' என்று ரமணர் கூறுகிறார்.
பொதுவாக இறை உணர்வு இருக்குமேயானால் இறைவனுடைய பாதுகாப்பு கண்டிப்பாக இருக்கும். இது இறைகவசம் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது இறை நினைப்பு குண்டுதுளைக்காத கார் போன்றது. இந்த இறை நினைப்பிற்கு மனதின் பங்குதான் அதிகம் வேண்டியிருக்கிறது. இதனால் அடிக்கடி மனதை எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் மனம் ஊர் சுற்றப் போய்விடும். 'வாழ்க்கையில் அனைத்தும் மனிதனின் மனதிலிருந்துதான் புறப்படுகின்றன' என்று மேலைநாட்டு தத்துவஞானி ஜேம்ஸ்ஆலன் கூறுகிறார். பொதுவாக முக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். ஆன்மாவை அறிந்தால் எல்லாம் கிடைக்கும்.
'இறைவனை நினைக்காத நிமிடமும்
இறைவனை உணர்ந்து போற்றிப் பேசாத நாளும்
இறையன்பர்களை சந்திக்காத வாரமும் வரவேண்டாம்'
என்று நாம் எண்ண வேண்டும். இப்படி எண்ணுகின்ற போது மனம் இறைவனைச் சுற்றி சுற்றி வரும். இறைவனை வலம் வரும்போது மனம் வலிமை பெறும். பொதுவாக பகவத்கீதை, தத்துவம், ஞானம் இவற்றை கற்றுக் கொள்ளும்போது மனதின் அற்ப சிந்தனை போய்விடும்.
நமது மனம் வலிமை பெற்றவுடன் நாம் ஏதாவது ஒன்றை சாதிக்க முற்படுவோம். அதுவே லட்சியமாகும். அந்த லட்சியம் வெற்றி பெற சுயகட்டுப்பாடு, உழைப்பு, தொடர்ந்து செய்யும் தன்மையையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நாம் தவறை ஒப்புக் கொண்டு நம்மைத் திருத்திக் கொள்ளும்போது வெற்றி உறுதியாகிவிடுகிறது.
ஓர் அறிவிலிருந்து ஐந்தறிவுவரை உள்ள பல கோடி உயிரினங்கள் இருந்த போதும் மனிதனுக்கு மட்டுமே நல்ல மனமும், அறிவும் இறைவனை அடைவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. மனித அறிவு, ஆறாவது நிலை அறிவு என்று வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லோரும் மனதின் திறனால் அந்த ஆறாவது அறிவை அறிய முற்படுவதில்லை.
மனதை அறிவின் பக்கம் செலுத்துவதற்கு ஆலயம் ஒரு மையமாக அமைகிறது ஆலயத்தில் செலுத்தும் பக்தி, அதில் மறைந்திருக்கும் உண்மையை அறிய முயற்சிக்கும் போது மனம் படிப்படியாக அறிவை நோக்கிச் செல்கிறது.
ஒருவரது மனம் முழுமையாக அறிவுடன் கலந்து நின்றால் அவர் முக்திநிலைக்குத் தயாராகிறார். உலகவாழ்வில் வெற்றி பெறுகிறார். நல்லவைகள் அவரைத் தேடிவரும். ஆனந்தம் என்பது அனுபவிக்கப்பட்டாலூம் சரி, இல்லாவிட்டாலூம் சரி, எப்போதும் அது இருந்து கொண்டே இருப்பதுதான். வந்து போவதாகத் தோன்றுவது மனதின் இயல்புதுதான்.
|
| மனித வாழ்க்கையில் மனதின் பங்கு |
| |
உலகியல் வாழ்வில் வெற்றி பெற மனதின் பங்கு |
ஞானவாழ்வில் வெற்றிபெற மனதின் பங்கு |
| 1 |
எந்த மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் இருப்பது |
எந்த நிலையிலும் இறைவனை மனதில் இடைவிடாது நினைப்பது |
| 2 |
சாமர்த்தியமாக மற்றவர்களிடம் நடந்து கொள்ளுதல் |
சாமர்த்தியமாக மனதை அறிவுப்பக்கம் கொண்டு செலுத்துதல்
|
| 3 |
உயர்ந்த பண்பு |
உலகமக்களின் நலனில் அக்கறை செலுத்துதல்
|
| 4 |
எப்பொழுதும் தெளிவான சிந்தனை |
எதிலும் சமநிலை |
| 5 |
சுய கட்டுப்பாடு |
சுயகட்டுப்பாட்டுடன் தவத்தை தொடர்ந்து செய்தல் |
| 6 |
நம்பிக்கையாளராக வாழ்தல் |
பலர் நேசிக்கும்படியான அன்பராக இருத்தல் |
| 7 |
புன்னகையோடு பேசுதல் |
அன்பும், கண்டிப்பும் கலந்து பேசுதல்
|
| 8 |
பேச்சாற்றல் |
அமைதியாக சிலவார்த்தைகள் பேசுதல் |
| 9 |
எல்லோரிடமும் ஒன்றி வாழ்தல் |
அவ்வப்போது தனிமையில் இனிமை காணுதல் |
|
|