எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்று எண்ணுவது. சரி. எப்படி?
எல்லோரும் இன்பம் பெறுவது என்று உணர்ந்து பார்க்க வேண்டுமல்லவா !
நமது மனம் வெளியில் சென்று ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அது சிற்றின்பமாக மாறிவிடுகிறது.
அதே மனம் நமது நினைப்பால் இறைவனை தனக்குள்ளே உள்ளத்தில் வைத்து வழிபடும்போது அது நாளடைவில் பேரின்பமாக மாறிவிடுகிறது.
அப்படி பேரின்ப நிலையை அடைய பொறுமையான இறைநினைப்பும், ஞானகுருவின் பயிற்சியும் பெறவேண்டும்.
ஆனால் மனிதன் இந்த உலகில் நிலையாக இருப்போம் என்று எண்ணுவதுதான் பெரிய அதிசயமாக இருக்கிறது.
ஒரு மாணவனுக்கு 2 மணிநேரம் கொடுத்து பரிட்சை நேரத்தை வீணாக்கிவிட்டு கடைசி 5 நிமிடத்தில் எப்படி படபடப்புடன் பரிட்சை எழுதி அவன் பாஸ் பண்ணமுடியும். நிச்சயமாக அவனால் முடியவே, முடியாது.
இதைப்போன்றுதான் சிறுவயதிலிருந்தே கண்டதையெல்லாம் படித்து, பார்த்து, பேசி பொன்னான நேரத்தை வீணடித்து விட்டு வயதான பின் சாகப்போகிற நேரத்தில் சங்கரா! சங்கரா! என்றால் என்ன பிரயோசனம்.
இளமை ஒரு நாள் முதுமையாக மாறும், ஆனால் முதுமையோ மீண்டும் இளமையாக மாறாது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இளமையிலேயே இறைநினைப்பை பெருக்குங்கள். படிப்படியாக ஞானத்தை உணருங்கள் - என்று ஞானிகள் கூறி வந்தனர்.
ஆனால் மாயை, மனிதர்களை வளைத்துவிட்டது. இறைவனை நினைக்கும் நேரம் கடுகளவுகூட இல்லை. மனதை இறைவன் பக்கம் திருப்ப முயற்சிக்க நேரம் இல்லை என்ற பதில்தான் எல்லோரிடமும் இருந்து வந்தது.
இதைப் பார்த்த ஞானிகள் நீங்கள் எளிமையாக வணங்க கோயிலுக்கு வாருங்கள் என்று அர்த்தம் நிறைந்த வகையில் கோயிலை எழுப்பினர்.
ஆனால் அந்தக் கோயிலில் என்ன உணர்த்தப் பட்டிருக்கிறது என்று மக்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. ஏதோ எங்கள் தாத்தா பாட்டி இந்தக் கோயிலுக்குத்தான் போனார்கள். நாங்களும் போகிறோம் என்று கூறுவதைக் கேட்டிருக்கலாம்.
பணத்தை எண்ணிப் பார்க்கும் அளவிற்கு இறைவனை எண்ணிப் பார்க்கும் பக்குவமும், ஆர்வமும் இந்துக்கள் என்று கூறும் நமக்குஇல்லை என்பதை சிந்திக்க வேண்டியிருக்கிறது.
சிந்தனை செய் மனமே!
அதாவது ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு அதில் உள்ள முக்கியமான சீனை நினைத்தவுடன் அந்தக் காட்சி உங்கள் மூளையில் இப்பொழுதுகூட ஓடுவதைப் பார்க்க முடிகிறது.
அதைப்போன்று உங்களுக்கு விருப்பமான கோயிலை உள்ளத்தில் நிரந்தரமாக எழுப்பி அதில் அவ்வப்போது சென்று தனக்குள்ளே வழிபடவேண்டும் என்பதைத்தான் கோயில் எழுப்பிய புண்ணியவான்கள் கூறுகின்றனர்.
தனக்குள்ளே கோயில் எழுப்பி வாழ்பவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள். அந்தக் கோயிலில் சற்குருவை வைத்து மானசீகமாக பூஜிப்பவர்களே முக்தி நிலையை அடையப்போகும் மனுஈசர்கள். இந்த உலகிலும், மறுமையிலும் வெற்றிபெறும் பாக்கியவான்கள்.
பொதுவாக மரபு வழிவந்ததுதான் கோயில். அதில் அடங்கிய மூல விளக்கங்கள் யாவையும் மரபு வழிவந்த ஞானகுருமார்கள் வாயிலாக அறிந்து பின்பற்றி வந்தால் நோயேது, மனப்பேயேது, மும்மலங்கலேது எல்லாம் காணாமல் போகும். இறைவனின் அருளும் ஆசியும் கிடைக்கும்.
நமது ராஜாக்கள் ஞானகுருமார்களை மதித்தார்கள். அவர்களது ஆலோசனைப்படி பெரிய பெரிய கோயில்களைக் கட்டி மக்களைப் பரவசமூட்டினார்கள். அன்று அவர்கள் நினைத்திருந்தால் பெரிய மருத்துவமனை கட்டியிருக்கலாம்.
ஏன் கட்டவில்லை?
மனம் செம்மையானால் மருத்துவமனைக்கு வேலையில்லை. மனம் வேலை செய்து வெளியில் தான்தோன்றித்தனமாக அலைவதால்தான் நோய்கள் வரிசையாக வந்து நிற்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிகளுக்கு மனம் தான் காரணம். இந்த இரண்டும் பல வியாதிகளுக்கு ஏஜென்ட் மாதிரியாகும்.
மனம் அறிவுப்பக்கம் சென்றால் இறை நினைப்பு வரும். மந்திரங்கள் சொல்லச் சொல்ல மனிதன் தந்திரங்கள் வேலை செய்யாது. மனம் பெட்டிப் பாம்புபோன்று அடங்கி ஒடுங்கி இறைவன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும்.
அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்பதின் உட்கருத்து என்னவென்றால், பகவானின் பாதமாகிய அடியைப் பிடித்துக்கொண்டால் அது உதவுவதுபோல் நம் கூடப்பிறந்த சகோதரர்கள்கூட உதவமாட்டார்கள்.
இப்படி ஒரு சொல்லில் அர்த்தங்கள் யாவும் பதார்த்தங்கள் மூடி வைத்திருப்பதுபோல் பக்குவமாக மூடிவைக்கப்பட்டிருக்கிறது. அதைத் திறந்துகாட்டத்தான் அவ்வப்போது ஞானகுருமார்கள் தோன்றினர். தோன்றியிருக்கின்றனர். இனிமேலும் தோன்றுவர்.
நெகட்டிவ், பாஸிட்டிவ் மாதிரி நமக்கு மனமும் அறிவும் இருக்கிறது. இது இரண்டும் சேர்ந்தால்தான் கரண்ட் வருவதுபோல் இறைவன் நம்முன் அருட்பெரும் ஜோதியாக தோன்றுவார். பிறகு காட்சியளிப்பார். இதற்கு நல்ல எலக்ட்ரிசன் மாதிரி ஞானகுருதேவை. குருவானவர் இறைவனை உள்ளும் வெளியிலும் காட்டுவார்.
பொதுமக்கள் மத்தியில் நோய்கள் அதிகரித்திருக்கும், மனம் இறைவனை நினைக்க முடியாததற்கும் காரணம் சோம்பேறித்தனம்தான் என்பதில் சந்தேகமில்லை.
தூக்கம்தான் துக்கத்தின் துவக்கம். உலகமே போர்க்களம். அதில் சுதாரிப்பாக போரிட்டு வெற்றி பெற்றால்தான் இறைவனை அடையவும் முடியும். சிறப்பாக இங்கு வாழவும் முடியும். படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
நடந்துகொண்டே மந்திரம் கூறுவதால் மனம் ஒருமித்து அறிவுடன் இணைந்து இறைவனை நினைக்க முடியும். நமக்கு எளிதில் இறை பிரசன்னமும் கிடைக்கும்.
இதனால்தான் பாத யாத்திரை என்ற நடைப்பயிற்சி வைக்கப்பட்டது. அந்தநாளில் பாதயாத்திரைகள் துவங்கப்பட்டது. இன்று அதை நம் மக்கள் செய்து வருகின்றனர். பாராட்டுவோம். ஆனால் ஒரு திருத்தம். அடிக்கடி ஊர்க்கதை, சுயசரிதம் பேசுவதை நிறுத்தவேண்டும்.
'தூண்டில்காரனுக்கு மிதப்புமேல் கண்', 'கரகாட்டக்காரிக்கு தன் தலைமேல் எண்ணம்' என்பதுபோல் நமது மனம் தன் சிரசில் உள்ள இறைவன்மேல் நினைப்பாக உலகில் வாழவேண்டும். எண்சான் உடலுக்கு சிரசே பிரதானம்.
'தலை இருக்க வால் ஆடக்கூடாது' என்பது பழமொழி. தலைக்குத்தான் முக்கியத்துவம். ஏனென்றால் தலையில்தான் இயக்கம் இருக்கிறது. ஒரு சொல்லை ஆமோதிக்க தலையைத்தான் ஆட்டுவோம். வேண்டாம் என்றால் தலையைத்தான் குறுக்கே ஆட்டுவோம். பொதுவாக ஆமோதிக்க, ரசிக்க, எல்லாவற்றிற்கும் தலையைத்தான் ஆட்டுவோம்.
பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் போன்று ஐந்து முக்கியமான செயல்களும் தலைக்குள்ளேதான் இருக்கிறது. இறைவனை ஐந்து செயலால் உணர ஆரம்பித்துவிட்டால் துக்கம் ஓடிவிடும். 'துக்கம் விட்டால் ஞானம். ஆசை விட்டால் ஆனந்தம்'.
பாதயாத்திரையால் கோயில் பயணம் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் வேண்டாம். அந்தப் பயணம் பக்தியின் துவக்கம். ஆனால் காலை நேரத்தில் எழுந்து வீட்டில் ஒரு தலையணையை நடுவே வைத்துவிட்டு அதைச் சுற்றி மந்திரம் சொல்லி வந்தால் நித்தம் நித்தம் பாதயாத்திரை செய்து, இறைவனை அடைய சரியான வழி.
வெளியில் சுற்றும்போது தலைக்குள்ளே கோயில் கட்டி அங்கே மூலஸ்தானத்தில் நீங்கள் எண்ணத்தால் இறைவனைச் சுற்றி வரவேண்டும். அந்தக் கோயில் உங்களுக்குப்பிடித்த எந்தக் கோயிலாகவும் இருக்கலாம்.
பொதுவாக கழுதை, குதிரை, யானைகள் வேலைக்கு பழக்கப்படுத்துவதற்கு முன் முரட்டுத்தனமானவை தான். ஆனால் மனிதனால் பழக்கப்படுத்திய பின் சொன்னவைகளையெல்லாம் செய்கிறதல்லவா! பயிற்சி தான் இதற்கு காரணமாகும்.
இதைப்போன்றுதான் மனிதனின் மனமும். சரியான குருவின் உபதேசத்திற்குப் பின் உங்கள் பயிற்சி உங்கள் இறை நினைப்பு, உங்கள் மனதைப் பக்குவப்படுத்திவிடும். பிறகு அமைதியும், நிதானமும், தெளிவும் பிறக்கும்.
கோயிலின் கோபுரம் உயர்ந்து நிற்பதுபோல் உங்கள் வாழ்க்கையும் உயர்ந்து காணப்படும். தனக்குள் ஏற்படும் மாறுதல்களை பொறுமையுடன் கவனியுங்கள். எதிலும் உங்கள் சக்தி, செயல் சிறப்பாக காணப்படும்.
எது நடந்தாலும் அதன் துவக்கம் குழப்பம் மிகுந்ததாக இருந்தாலும் முடிவு சிறப்பாக இருக்கும். அப்படி எது நடந்தாலும் அது முற்றிலும் நன்மைக்கே என்ற சிறப்பான எண்ணத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒருபோதும் நம்பியவர்களை இறைவன் கைவிடமாட்டார்.
மரபு சித்தாந்த கலை முன்னேற்ற
நிலை தமிழ் தெய்வ மரபு வழி
கோயில் என்றால் என்ன?
அருங்காட்சியகம். அருமையான காட்சிப் பொருளாக விளங்கும் ஆலயத்தை நமது உள்ளத்தில் கொண்டு வந்து அங்கு பரமகுருவாகிய, சற்குருவாகிய இறைவனை வைக்குமிடம் தான் கோயில்.
கோயில் ஏன் கட்டப்பட்டது?
மரபு வழி தெரிவதற்காக
மரபு என்றால் என்ன?
முதல் நிலை நாகரிகத்தில் முன்னேற்றத்தில் இருப்பது.
அதை எப்படி கண்டுபிடிப்பது?
முன்னேற்ற நிலையிலிருந்து உயர்வால், உண்மையான தொன்மைக்கல்வியினால்.
இதெல்லாம் உங்களுக்கு குழப்பமாகத்தானிருக்கும். பொதுவாகத் தமிழ் எழுத்துக்கள் தெரியாதவன் எப்படித் தமிழ் புத்தகத்தைக் படிக்க முடியும்? முதலில் படிப்பறிவு வேண்டும். பிறகு தானாகவே நூலறிவு வந்துவிடும்.
அனுபவத்திறனறிவு உள்ளவருக்குப் படிப்படியாக நுண்ணறிவு வந்துவிடும். நுண்ணறிவு வந்து விட்டால் உணர்வுப்பாதை புலப்படும். அதன் பிறகு உணர்வுப் பாதையில் பயணம் செய்பவர்களுக்கு இறைவன் இருக்குமிடம் தெரிந்துவிடும்.
இதற்கிடையில் ஞான விளக்கங்கள் உணர்ந்த சற்குரு அல்லது
ஞான அனுபவம் நிறைந்த நண்பர்களால் ஏற்படுத்தப்பட்ட குரு தேவை.
பிறகு உங்கள் உழைப்பும், பக்தியும் எண்ணத்தில் அலைகள் இல்லாத நிலையுடன் இறைவன் பக்கம் செல்ல வேண்டியது மிகமிக அவசியம்.
உள்ளே இருக்கும் விசயத்தை வெளியில் இருப்பதாகக் கூறுவதே அனுபவ நிலையில்தான். கோயிலில் இறைவன் இருப்பதாக நினைப்பது நம் மனதின் திறனிலையில் ஒன்று தான். ஆனால் கோவிலை வெளியில் இருப்பதாக நினைப்பதே நம் எண்ணத்தின் திறனிலையில் மாறுபட்டதுதானே! இந்த மாறுபாட்டிற்கு மரபு என்று பெயர்.
மரபு வழியில் ஏன் கோயிலை நிறுவினார்கள் என்றால், தனக்குள் கோயில் கட்டி இறைவனைக் காண முடியாதவர்களுக்கு வெளியில் கோயில் கட்டி முறைப்படி உணர வைத்தார்கள்.
ஆனால் மேலோட்டமாக மக்கள் அதைப்பார்த்தார்களே தவிர உணர்வுபூர்வமாக சிந்தித்து செயல்படவில்லை. பொறுப்பற்ற பெற்றோர்களும், தன்மையில்லாத நண்பர்களும் தான் சந்ததிகளின் அறியாமைக்குக் காரணம் ஆகும்.
பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் கோயில் இல்லை. ஆனால் குருகுலம் இருந்தது. ஞானிகள் இருந்தனர். துவாபரயுகமாகிய அன்று முரடர்கள்கூட தியானம் செய்தனர். சிவலிங்கத்தை வணங்கினர்.
கடவுள் இல்லை என்று அவர்கள் கூறவில்லை. ஒவ்வொருவர் உள்ளத்திலும் சிவன் கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் இறைவனைக் கண்டறிந்து வழிபடத் தெரியாதவர்கள் அன்றும் ஏமாற்றம் அடைந்தார்கள்.
பொதுவாக இடைவிடாது இறைவனை நினைப்பது தவம். விட்டுவிட்டு இறைவனை நினைப்பது தியானம். குடும்பத்தில் இருப்பவர் தியானம் செய்தாலே போதுமானது. மரபு முறைப்படி வெளியில் இருக்கும் கோயிலை உள்ளே கொண்டுவந்து எண்ணத்தால் வினாடிக்கு வினாடி வழிபடுவதே சாலச்சிறந்ததாகும்.
முத்தமிழ் என்றால்
1. மரவு வழி உண்மைக்கல்வி
2. பார்வைக் கல்வி
3. சொற்கல்வி
வேதத்தின் சாரம் என்று சற்குரு போதம் கூறுவது கலைக்கல்வியாகும். வேதத்தைப் படித்துவிட்டு எதார்த்தவாதியாகி சென்றுவிடுவர் பலர்.
வேதத்தைப் படித்துவிட்டு வேதாந்தமாக சிந்தித்து வேதத்தின் சாரத்தை உணர்ந்தவர்கள் முக்தியடையத் தயாராகிவிடுவர். அதோடு மக்கள் உண்மையை அறிய குருவாகிவிடுவர்.
வேதத்தின் சாரத்தை உணர்ந்தோர்களே மரபின் ரகசியத்தை உணர்ந்தவர்கள்
சிவன் கோயிலில் சிவனை தரிசித்து வணங்குபவர்கள் வேதம் படித்தவர்களாகவோ, வேதம் படிக்காதவராகவோ இருக்கலாம்.
கோயிலில் சிவனை தரிசித்து வணங்கிவிட்டு வந்து அந்த சிலை சிவனாக முடியுமா என்று நினைத்தால் கண்டிப்பாக முடியவேமுடியாது.
அதேபோன்றுதான் சிவன் மனித வடிவில் வெளியில் நடமாடிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுபவரும், பேசுபவரும் வேதாந்திகளே.
இந்த வேதாந்தி பல நாள் அலைந்து உணர்ந்து இறைவனை வெளியில் பார்க்க முயற்சிக்கும்போது தெளிவு குரு கிடைப்பார். அவரே சற்குரு. அவரே பரமகுரு. அவரே கடவுள். வேதத்தின் உண்மைசாரத்தை உணர்வதால் அவர் முக்திநிலைக்குத் தயாராகிவிடுகிறார்.
மரபை உணர்ந்தவர் உண்மை நிலைக்குத் திரும்பி விடுகின்றனர். உண்மை என்பது இறைவனைத் தனக்குள்ளே பார்ப்பது. தனக்குள்ளே பார்க்கப் பார்க்க உடல்கோயிலாகவும், சீவன் இறைவனாகவும் மாறுகிறது. புழுவாக இருந்து பின்பு வண்ணத்துப் பூச்சியாக மாறி பறந்து செல்லவில்லையா?
இதைப்போன்றுதான் மரபை உணர்ந்து கொண்டவர்கள் ஞான இறக்கைபெற்று இன்பஉலகைக் கடந்து பேரின்ப ஆகாயத்தில் பறந்து செல்கின்றனர். அதில் நாமும் பறந்து செல்வோம் என்ற நம்பிக்கை கொள்வோம். விழிப்புணர்ச்சி பெறுவோம். சித்தாந்த உண்மையை அறிந்து, வேதாந்த மேன்மையை உணர்ந்து வளம் பெறுவோம். |