'தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திரு உருவை சிந்தித்தல்தானே'
|
இடைவிடாது சற்குருவின் திருஉருவத்தை நினைப்பதும் சிந்திப்பதும் தான் தியானமும் தவமுமாகும் என்று திருமூலர் திருமந்திரமாகக் கூறுகிறார். இன்று சற்குரு, பரமகுரு யார் என்று கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு முடிந்த சற்குருமார்களை உருவமாக சிலைவடிவில் காட்டப்பட்டுள்ளது. பரமகுருவின் மறைபொருள் அம்சம்தான் சிவலிங்கம். தற்பொழுது இருக்கும் சற்குருவைக் கண்டறிந்துமனதில் நிறுத்தி வணங்கினால் சகலமும் கிடைக்கும்.
'பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் 'கூறுகிறார்
|
- எந்த வகையில் என்னை வழிபட்டாலும் நான் ஏற்றுக்கொள்வேன். அதே நேரத்தில் என் உருவத்தை உன் மனதில் நிறுத்தி, உனது எண்ணத்தை அத்துடன் இணைத்து ஒரு நிலையாக்கி, என்னைத் தானாகவே ஆக்கிக் கொள்வோர்தான் எளிதாக என்னை அடைய முடியும்.
- ஏனெனில் என் உருவத்தை மனதைவிட்டு எடுத்துவிட்டு உருவமில்லாத என் ஒளி வடிவத்தை மட்டுமே உள்ளத்தில் நிறுத்தி மனதை ஒருநிலைப்படுத்த முயற்சிப்பது எளிதானது அல்ல. அப்படி முயற்சிப்பதில் கஷ்டங்கள் மிகவும் அதிகம்.
- நான் எங்கும் நிறைந்திருந்தாலும், எதிலும் கலந்திருந்தாலும் உன் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு சிறந்த எளிமையான மார்க்கம் என் திருஉருவத்தை உன் மனதில் நிலை நிறுத்தி வழிபடுவதேயாகும்.
- நீ செய்யும் எந்தத் தொழிலையும் எனக்காகவே செய். தொழிலின் பலனை அனுபவிக்க எண்ணாதே அதை எனக்கே சமர்ப்பணம் செய்துவிடு.
பயிற்சியின் வாயிலாக சிறுகச்சிறுக என்னை நெருங்க முயற்சி செய்.
பயிற்சியின்போது ஞானத்தை நாடுவது சிறந்தது. ஞானத்தை விட தியானம் சிறந்தது தியானத்திலும் உயர்ந்தது தியாகம். தியாகத்தின் பயனாக மனச் சஞ்சலம் அகன்று நிம்மதி கிடைக்கும். மனத்தை அடக்கி என்னையன்றி வேறு எண்ணமே இல்லாதவன் என்னுடைய இணையில்லாத பக்தனாகி விடுவான்.
நாம் எதையும் பார்த்து அதை மனதில் கொண்டுவந்து உள்ளத்தில் நிலைநிறுத்திப் பழக்கப்பட்டவர்கள். எதையும் பார்க்க ஆசைப்படுவது ஒரு மனித இனத்தில் தொன்றுதொட்டே உள்ளது. இதனால்தான் தற்பொழுது சினிமா, டெலிவிசன் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். போட்டோ எடுப்பதிலும், கண்ணாடி பார்ப்பதிலும் ஆசைப்படாதவர்களே கிடையாது.
உருவத்தைப் பார்த்தும், இயற்கைக் காட்சிகளைப் பார்த்தும் அதை ரசிக்கும் நமக்கு "அருவமாக" ஒன்றை இறைவன் என்று கூறும்போது எப்படி மனம் எடுத்து வந்து உள்ளத்தில் நிறைநிறுத்தும். இதனால்தான் ஞானிகள் மனதின் நிலையை அறிந்து உருவ வழிபாட்டிற்கான ஏற்பாடு செய்தனர். அதுவே பல அர்த்தங்களைக் கொண்ட பஞ்சபூத தலங்களாக முதலில் அமைந்தது.
'தன்னில் ஒரு சக்தியை வளர்த்துக்கொள்ள விரும்பினால், தனக்குள்ளே ஓர் சக்தியை இயங்கச்செய்து அதன் வாயிலாக பலன் பெறவேண்டும். உதாரணமாக மின்சாரம் புது வீட்டிற்கு வாங்க விரும்பினால் மின் விளக்கு மின் விசிறி, டெலிவிஷன் போன்றவைகளைப் பொருத்தி பலன் பெறவேண்டுமல்லவா!
நமக்குள்ளே ஒரு கோயிலை உள்ளத்தில் நிலை நிறுத்தி இது உறுதி என்று வழிபட ஆரம்பித்தால் இறைவனின் நிலையமாக அது மாறுகிறது. எங்கும் எதிலும் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு செயல்படும்போது அங்கு இறைவன் காட்சியளிக்கிறார்.
நாளை வருகிறேன் என்று கூறுவதே நாம் நாளைவரை உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கைதானே. பூணூல் போன்ற காற்று நம்மில் ஓடுவது நின்றாலே நாளை என்ற வார்த்தை பொய்யாகிவிடும். பூகம்பம் வந்தாலே யார் இருப்பார், யார் போவார் என்று தெரியாது. இப்படியிருக்கும் உலகில் மனித வாழ்க்கையே ஒரு நம்பிக்கையால் இயங்குகிறது.
நம்பிக்கை என்ற சக்தியால் தான் மனம் ஒரு விசயத்தைப் பற்றுகிறது. மனம் பற்றக் காரணம் அந்த மனதிற்கு அதில் நம்பிக்கை வரவேண்டும். நம்பிக்கை வர மனதிற்கு அந்த பொருள் அல்லது விசயம் பிடித்திருக்கவேண்டும்.
பத்து நபர்கள் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்றால் அங்கு ஒருவர் இட்லி வடை என்றால் மற்றொருவர் சப்பாத்தி என்பார். இப்படி பத்துப்பேரும் ஏதாவது பிடித்ததைத்தான் கேட்பார்களே தவிர ஒரே மாதிரி கேட்பதில்லை. அப்படி ஒரே மாதிரி கொண்டு வரச் சொன்னால் அதில் ஒருவர் 'போயும் போயும் இங்கு வந்து இதையா சாப்பிடுவது' என்று முனகிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம்.
விபரம் தெரிந்த மனிதனுடன், விபரம் தெரியாத மனிதன் அடக்கமாக வருவதில்லை. பக்தி என்பதே தனக்குள்ளே இறைவனுடன் பேசுவது. வெளியில் கண்டதையெல்லாம் பேசுவது பக்தியல்ல என்பதை உணராதவர்களை உணரவைக்கத்தான் கோயில் என்பதை பல வடிவில் கொண்டுவந்து சித்தர்களும், ஞானிகளும் அன்று அரசர்கள் வாயிலாகவும் பணம் படைத்த பக்தர்கள் மூலமாகவும் நிறுவியிருக்கின்றனர்.
உதாரணமாக வெளியில் இருந்து வேர்த்துப் போய் வருபவருக்கு மின் காற்றாடியைப் போட்டு உட்கார வைத்தால் வேர்வை அடங்கும். அவர் உடலுக்கு சுகம் கிடைக்கும்.
அந்த நேரத்தில் உணர்வுப்பூர்வமாக உள்ளவர் மின் சக்தியை மனதில் நினைப்பதால் அந்த மின் சக்தியின் உண்மைத் தத்துவங்கள் அறிவுப்பூர்வமாக தெரிந்துவிடும். ஆனால் அறிவுப்பக்கமே செல்லாத மனதிற்கு காற்றின் சுகம் மட்டும்தான் தெரியும். மனம் உணர்வுப் பாதையில் பயணிக்கும்போது அறிவுடன் இணைந்து செயல்படுகிறது. இப்படி அறிவுப்பக்கம் செல்பவர் கடவுளுடன் இணைந்துவிடுகிறார்.
காற்றாடியின் காற்றை இருவர் அனுபவித்தாலும் ஒருவர் அந்தக் காற்றின் சுகத்தோடு நின்றுவிடுகிறார். மற்றொருவர் காற்றாடியின் இயக்கம், மின்சாரத்தின் சக்தி, அது எங்கிருந்த வருகிறது என்ற தத்துவங்களை அந்த சுகமான நேரத்திலும் சிந்தித்து அவரால் உணரமுடிகிறதல்லவா! அதுவே உணர்வுத் தத்துவம். இந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு கோயிலும் அறிவுப்பூர்வமாக உணர்ந்து இறைவனை அடைய நிறுவப்பட்டிருக்கிறது.
மின்சாரம் எங்கிருந்தோ தோன்றி மின் கம்பி வாயிலாக வந்தாலும் அது ஒரு இடத்தில் வந்து மின் விளக்காக பிரகாசிக்கிறதல்லவா. இதைப்போன்று இறை சக்தி நிறைந்துள்ள ஓர் பொருளில் மனதைச் செலுத்தி இறைவனை நினைப்பவருக்கு இறைவனின் தத்துவங்கள் உறுதியாகவும் தெள்ளத் தெளிவாகவும் புலப்படும்.
அருவமாக கடவுள் இருப்பதாக உணர்ந்தாலும் அவர் பிரதிபலிப்பது ஓர் உருவத்தில்தான். மின்சாரம், மின் கம்பியில் அருவமாக வந்தாலும் அது ஓரிடத்தில் ஒரு பொருளில் வாயிலாக அதாவது மின் விளக்கு, மின் விசிறி, டெலிவிசன் என்று தான் பிரதிபலிக்கிறது.
இதைப்போன்று உருவத்தில் கடவுளை நினைப்பதில்லை என்று சொல்பவர்கள் வேறெந்த வழியிலும் கடவுளை நினைக்க சாத்தியப்படாது.
உருவ நிலையில் கடவுளை வழிபடாதவர் கடவுளை வழிபடுவதில்லை என்று கூறலாம். கடவுளை எந்த வழியில் ஒப்புக்கொண்டாலும் மனிதன் உருவவழியாகத்தான் அவரை அறியமுடியும். மனதை அறிவுப்பக்கம் தொடர்ந்து செலுத்துபவருக்கு கடவுள் சற்குருவடிவில் வருவார் என்பதில் சந்தேகமே இல்லை. பகவத் கீதையில் மீண்டும் மீண்டும் வருவேன் என்று பகவான் கூறியிருக்கிறார்.
'சந்தேகமறத் தெளிய வைப்பதே கோயில்' ஞானிகளின் உள்ளத்திலிருந்து வந்ததே கோயிலும், விக்கிரகமும். அவர்கள் உள்ளம் பெரும் கோயில். அந்த அர்த்தமுள்ள கோயிலை நமக்கு வெளியில் கட்டி வைத்துக் காட்டிச் சென்றுள்ளனர். பிறகு அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து மரபு குருவழிவந்து, சற்குருவை சந்தித்தால் பிறவி வெற்றி பெரும். உருவ வழிபாட்டின் ரகசியத்தை நீங்கள் உணர்வீர்கள். பொதுவாக சிறு குழந்தை அது கையில் வைத்திருக்கும் பொம்மையை கட்டிப்பிடித்துக் கொண்டே இரவில்கூட படுத்திருக்கும். தாயைவிட அதை நேசிக்கலாம். ஆனால் அதே குழந்தை வாலிபம் வந்தவுடன் பொம்மையை கையில் வைத்திருக்குமா? இதைப்போன்று ஞான அறிவு வரும்வரை உருவ வழிபாடு தேவை.
'எல்லாம் கடவுள் செயல் என்று அறிந்தால் துன்பமுமில்லை. கவலையுமில்லை'.
|
குறிப்பு:-
1. முறையான இறைவணக்கம்
2. எளிமையான முறையில் உயர்ந்த தியானம்
3. தெளிவான ஆலோசனை
இலவசமாக ஞாயிறுதோறும் வழங்கப்படுகிறது.
முகவரி: துரைமுருகர் மரபு சித்தாந்த தியான சபை, நத்தாநல்லூர், வாலாஜாபாத் தாலுகா,
காஞ்சிபுரம் மாவட்டம், பஸ் எண்.79.
|