என்ற பொன்மொழிபோல் நம்முள் உறைந்திருக்கும் உண்மையாகிய இறைவனை நமக்கு உணர்த்தி வழிகாட்டுபவரே மெய்குரு. அறியாமை என்ற இருளில் மூழ்கியிருக்கும் நம் மனதில் அறிவெனும் விளக்கேற்றி ஞானமெனும் ஒளியை நம்முள் பரவச் செய்பவரே மெய்குரு.
நம் உள்ளத்தில் இறைவனை வளர்ப்பதற்கு சத்தான ஆன்மீகக் கருத்துக்களை போதித்து பரிபக்குவமாக தியானிக்கும் வித்தையைக் கற்றுக்கொடுப்பவரே மெய்குரு.
இறைவனை அடைய நமக்குவேண்டிய சத்தான பொருட்கள் இருக்கும் சூப்பர்மார்க்கெட்தான் இந்துமதம். சமையல் பொருட்களை வாங்கி சரியான அளவில் பரிபக்குவமாக கலந்து சத்தாகவும், ருசியாகவும் சமைத்துத் தருபவரே ஞானகுரு.
இந்தமதம் என்பதற்கு 'ஸநாதன தர்மம்' என்ற பொருள் கூறப்படுகிறது. இதற்கு அழிவில்லாத அறம் என்பது பொருளாகும். இதுமட்டுமல்லாது இந்து மதத்திற்கு சன்மார்க்கம், தவநெறி, அருள்நெறி, திருநெறி என்ற பெயர்களால் சொல்லி அழைக்கப்படுகிறது.
அகங்காரம், காமம், பேராசை, பற்று இவற்றை விலக்கி சுக துக்கங்களை நீக்கி ஆத்ம ஞானத்தில் திளைத்து ஆன்மாவின் உண்மைத்தோற்றத்தை அறிந்து ஜீவன் முக்தி பெற இந்து மதம் உதவுகிறது.
நாம் செய்த நல்வினை தீவினைகளுக்குத் தக்கவாறு மறுபிறவி உண்டு என்பதை ஆணித்தரமாகக் கூறி நமது இன்ப துன்பத்திற்குக் காரணம, அவரவர் செய்த கருமவினைப் பயனே என்பதை இந்துமதம் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்து மதத்தில் வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், சாஸ்த்திரம் எனப்பல அறிய நூல்கள் இருக்கின்றன. வேதம் என்பதற்கு அறிவு நூல் என்பது பொருளாகும்.
தெய்வீகமான கருத்துக்களை தனக்குள் அடக்கிக் கொண்டிருப்பதால் இந்து மதம் மறை எனப் பெயர்பெற்றது. இதன் உட்கருத்துக்களை மரபு உண்மையறிந்த குருமார்களின் உதவியால் அறிந்து, புரிந்து உணரவேண்டும். இதனால் இதைச் சுருதி என்று கூறுகின்றனர்.
வியாச முனிவர் இதனை ரிக், யஜீர், ஸாமம், அதர்வனம் என்று நான்காக வகுத்துள்ளார்.
ரிக் : இதில் இறைவனை துதித்துப் பாடி வணங்குவதற்கு உள்ள வழிகளைக் கூறியுள்ளார். இது பத்து மண்டலங்களைக் கொண்டது. ஒன்று முதல் ஏழு மண்டலங்களில் இறைவனை 'அக்கினி' என்ற பெயராலும், பத்தாவது மண்டலத்தில் பிரம்மன், இந்திரன் என்ற பெயராலும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளது. ஐதரேய, கௌசீதக என்ற இரண்டு உபநிடதங்கள் இருக்கிறது.
யஜீர் வேதம் : யாஜ் என்ற சொல்லிற்கு 'யாகம்' என்று பொருள்படும். யாகம் நமது மும்மலங்களைப் பலி செய்தல், தானம் செய்யவேண்டிய முறைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. பௌர்ணமி, அமாவாசை காலங்களில் செய்யவேண்டிய தவத்தைப் பற்றியும், இதில் கூறப்பட்டுள்ளது. ஈச, கட, தைத்திரிய, பிரஹதாரண்யக, சுவேதாஸ்தர, மைத்ராயணீ, மகாநாராயண என்று ஏழு உபநிடதங்கள் உண்டு.
ஸாம வேதம் : ஸாமம் என்ற இன்னிசையால் பாடப் பெற்றது. பரம்பொருளான பரமேஸ்வரனை அக்கினி, இந்திரன் முதலான பெயர் சூட்டி பாடப்பட்டுள்ளது. இசையுடன் இதனைப் பாடுவதால் பாபம் நீங்க நற்கதி அடையலாம். கேன, சாந்தோக்ய என்ற இரண்டு உபநிடதங்கள் உள்ளன.
அதர்வணம் : இதில் எப்படி மந்திரம் உச்சரிக்கவேண்டும், எதிரிகளின் இறப்பிற்கு எப்படி கிரியா முறைகள் செய்வது, அத்துடன் வேதாசாரக் கிரியைகளையும், அனுஷ்டானங்களையும் பற்றி தோத்திரங்களும் இருக்கின்றன. இதில் ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய என்ற மூன்று உபநிடதங்கள் உள்ளன.
உபநிடதங்கள் என்றால் நமது நான்கு வேதங்களின் பிரிவுகளிலிருக்கும் சம்ஹிதை, பிராம்மணம், ஆரணியகம் என்ற பாகங்களைச் சேர்ந்தவை. பொதுவாக 'உபநிஷத' என்றால் குரு அருகில்அமர்ந்து அவரால் நாம் அறிந்து கொள்ளப்படும் 'ஞானம்' என்பதாகும்.
'திருமுறை' என்றால் தம்மை அடைந்தவர்களைச் சிவமே ஆக்குகின்ற முறை எனப் பொருள்படும். சைவத்திருமுறைகள் பன்னிரெண்டு. அதில் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய 'தேவாரம்' மூன்று திருமுறைகளாகும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் ஏழாம் திருமுறையாகும்.
திருநாவுக்கரசு சுவாமிகள் நமக்களித்த 'தேவாரம்' நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாகும். மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம், திருக்கோவையார் எட்டாம் திருமுறையாகும்.
திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது பேர்கள் அருளிச் செய்த திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாந் திருமுறையாகும். திருமூலத்தேவர் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாந் திருமுறையாகும்.
திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார் மற்றும் பன்னிருவர் நமக்களித்தவை பதினோராந் திருமுறையாகும். சேக்கிழார்சுவாமிகள் அருளிச்செய்த திருத்தொண்டர்புராணம் பன்னிரெண்டாந் திருமுறையாகும். இதில் அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய வரலாறு கூறப்பட்டிருக்கிறது.
சைவசிந்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கு. இந்து மதத்தின் பெரிய உண்மைகளை நுணுக்கமாகக் கூறுகின்றன. இவற்றை மெய்கண்ட சாஸ்த்திரங்கள் என்று கூறுவர். இதில் தலைமையாக நிற்பது சிவஞான போதமாகும். 'ஞானம்' என்றால் பொதுவாக 'தெளிதல' என்று பொருள்படும். 'சிவம்' என்றால் இறைவனாகிய உயர்ந்த பொருளாகும். இது சிவத்தை அறிய போதிக்கப்படும் நூலேயாகும்.
இதிகாசங்கள்: இந்துக்களின் உடல் இராமாயணம் என்றால் உயிர் மகாபாரதம் ஆகும். இந்துக்களின் ஞான வளர்ச்சிக்கு பகவத்கீதை ஒரு பெரிய தங்க வைரச் சுரங்கமாகும். பொதுவாக இந்துமதத்தின் பழமையும், அன்றைய விஞ்ஞான, மெய்ஞான மேம்பாட்டையும் தொன்மையும், உயர்த்திக்காட்டுவது புராணங்களேயாகும்.
நம்மவரகள் சிலர் இதை பழித்துப்பேசி வீண்பொழுது போக்கிவிட்டனர். ஆனால் மேலைநாட்டவர் பலர் இதனைப் படித்தறிந்து விஞ்ஞானமாகவும், மெய்ஞானமாகவும் பயன்படுத்திக் கொண்டனர். புராணம் என்ற சொல்லுக்கு பழைய வரலாறு என்று பொருள்படும்.
உண்மை பேசு, தர்மத்தைச் செய் என்று நமக்கு வேதங்கள் வழிகாட்டுகிறது. 'நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு நான் சொல்லுவேன்' என்று கூறி நம்மை நல்வழிப்படுத்துகிறது.
மனிதன் கீழ்நிலையில் கிடந்து துன்பப்படுவதற்கு பக்குவப்படாததும், உண்மையை அறியாததும, அன்பு இல்லாமையுமே காரணமாகும் என்று ஞான சரிகை கூறுகிறது.
'பற்று அன்றிப் பற்று
பரம பரம்பரனை'
என்று நம்மாழ்வார் கூறுகிறார். தான் அனுபவத்தால் பெற்ற உண்மையை உயர்ந்தவர்கள் கூறும்போது அதை உடனே பின்பற்ற வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும்.
நம்மை மேன்மைபடுத்திக்கொள்ள திடமான முடிவெடுக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் முந்திய நாள் இருந்ததைவிட மேன்மேலும் உயர இறைவனை எவ்வளவு நேரம் நினைத்தோம் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். மலரில் மணம் இருப்பதுபோல நம்மிடம் இறைவன் இருக்கிறார். இதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. வாசனையில்லா மலர் போன்றவர்களை நாம் சிந்திக்கக்கூடாது.
நமது ஐம்புலன்கள் வழியாக வரும் இன்பம் முடிவில் சிக்கல்களாகவும், நோய்களாகவும், நெருக்கடிகளாகவும் மாறிநம்மை சேதப்படுத்திவிடும். இதனால் ஐம்புலன்களின் கதவை மூடிக்கொண்டு உள்ளத்தில் இறைவனைப் பார்க்கப் பழகிக்கொள்ளவேண்டியது நமது கடமையாகும். இதனால் அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும். இதைத்தான் இந்துமதம் இந்துக்களுக்குப் பாடமாக புகட்டுகிறது.
சிவபெருமானது இடது பக்கத்தில் மகாவிஷ்ணு இருப்பதாக தேவாரத்திலும் விஷ்ணுவின் வலது பக்கத்தில் சிவன் வீற்றிருப்பதாகப் பிரபந்தத்திலும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளது.
'பொதுவாக உனது பணிவாலும், பரிவு மிகுந்த கேள்வியாலும் சேவையாலும் உனக்கு மெய்ப்பொருள் கண்ட ஞானிகள் ஞானத்தை உபதேசிப்பார்கள்' என்று கீதை கூறுகிறது.
'நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க நல்லார் சொற்கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்க ளுரைப்பதுவும் நன்றே
அவரோடி ணங்கி யிருப்பதுவும் நன்றே'
வாக்குண்டாம் என்ற நூலில் கூறுவதுபோல நாம் நல்லாரைக் கண்டு குருவாக ஏற்று அவர்வழி சென்று இறைவனை இடைவிடாது நினைத்து வந்தால் இந்துமதம் சொன்ன பேரின்பம் பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.
'உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம்
உடம்பினுள் உத்தமனைக்காண்'
என்று ஒளவையார் வெட்ட வெளிச்சமாக மனிதர்களைப் பார்த்துக் கூறுகிறார். 'இறைவன் உனக்குள்ளே இருக்கிறார். எங்கும் தனி உலகத்தில் அவர் இல்லை. இதனால் உன் முழுகவனத்தை உள்நோக்கி உன் முகமாகத் திருப்பு. பிறகுபார் உனக்குள்ளே உத்தமனைக் காணலாம்' என்று ஒரு ஞானி கூறியிருக்கிறார்.
இந்துமதக் குழந்தைகளுக்கு 'சைவம' என்ற பசும்பாலில், 'தியானம' என்ற சர்க்கரை கலந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை முறையாகப் பருகும் குழந்தைகள் செழித்து வளர்ந்து ஞானவீட்டில் குடியேறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
சைவ சமயத்தில் மூன்று விரலால் திருநீர்ப்பட்டை நெற்றியில் இட்டுக்கொள்வதும், வைணவத்தில் நாமத்தை நெற்றியில் மூன்று கோடாகப் போட்டுக்கொள்வதும் பழக்கத்தில் உள்ளது.
ஒன்று பிறப்பு மூன்று இறப்பு இதற்கு இடையில்இரண்டு என்ற வாழ்க்கை உள்ளது. இதை உணர்ந்து நெற்றியில் மறைந்திருக்கும் சுழிமுனையில் மனதைவைத்து நெற்றிகண்ணைத் திறக்க இறைவனிடம் மன்றாடவேண்டும். அப்படி நாம் உணர்ந்து செயல்படும்போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. மும்மலங்கள் எரிந்து சாம்பலாகி நாம் புனிதப்பாதையில் பயணிக்க குரு அருளால் தயாராகிவிடலாம். ஜீவமுக்தி பெறலாம். இல்லாவிட்டால் பிறப்பு வீணாகி சாவைமட்டும்தான் சந்திக்க நேரும். ஆன்மா கரைசேராது.
|
- மும்மூர்த்திகள் -- பிரம்மா, விஷ்ணு, சிவன்
- முத்தொழில்கள் -- படைத்தல், காத்தல், அழித்தல்
- மூன்று பிரணவ மந்திர ஒலிகள்--அகாரம், உகாரம், மகாரம்
- முக்குணங்கள் -- ஸத்துவகுணம், ரஜோகுணம், தாமஸகுணம்
- மூன்று சக்திகள் -- இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி
- மும்மலங்கள் -- ஆசை, பயம், குரோதம்
- மூன்று சரீரம் -- ஸ்தூல தேகம், சூட்சும தேகம், காரண தேகம்
- மூன்று வினைகள் -- ஸஞ்சிதவினை, ஆகாய வினை, பிராப்த
வினை
- மூன்று ஆன்ம நிலைகள் -- சத்து, சித்து, ஆனந்தம்
|