HOME தியானத்தின் வெற்றி GURUJI SPEECH உள்ளம் பெருங்கோயில் பக்தியின் சிறப்பு பக்தியும் கோயிலும் BOOKS STICKERS  
 

உள்ளம் பெருங்கோயில் :

 
சத்தான பால் தரும் பசுமாட்டின் கால்களிலோ, கொம்புகளிலோ, வாலினிலோ நாம் பால் கறப்பதில்லை. பால் காம்புகளிருந்து மட்டும் தான் பால் கறக்கின்றோம். இதைப்போன்று, ஆலயத்தில் இறைவன் குடிகொண்டு இருப்பதாக இருந்தாலும், மூலஸ்தானத்தில் மட்டுமே அவர் நமக்கு காட்சி கொடுக்கிறார்.
   
 
நமது உடல் ஆலயமாகவும், நமது உள்ளம் பெருங்கோயிலாகிய மூலஸ்தானமாகவும் இருக்கிறது என்பதை திருமந்திரம் தெள்ளத் தெளிவாக கூறுகிறது. இதனால் நமது உள்ளத்தில் மூலஸ்தானமாகிய ஆனந்த சபையில் பகவானை சிம்மாசனத்தில் அமர்த்தி அவரது வலது பக்கம் அமர்ந்து மந்திரம் கூறி வழிபட வேண்டும்.
   
 
வழிபாடு, பூஜை, மானசீகப் பூஜை, தியானம் என்ற பயிற்சிகள் ஏன் கொடுக்கப்படுகிறது என்றால் மனதை பழக்கப்படுத்துவதற்காக. குழந்தைக்கு நாம் பேச்சுக் கற்றுக் கொடுக்கிறோம். ஆரம்பத்தில் தத்தி தத்திப் பேசினால் கூட ஒரு சில வருடங்களில் பழக்க வழக்கத்தால் சிறப்பாக பேச சிந்திக்க உணர ஆரம்பித்து விடுகிறதல்லவா!
   
 
இதைப் போன்றுதான் - நம் மனமும் ஒரு நாள் பகவானை உணர ஆரம்பித்தவுடன் தனது ஆத்மா தூயதாகிறது. அந்த ஆத்மன் கடலில் கப்பல் மிதந்து போவதுபோல் பிறவியை எளிதில் கடந்து விடுவான்.
   
 
ஒரு மரத்தில் பசுமையாக இருந்த இலைகள் ஒரு நாள் பழுப்பிலைகளாகி உதிர்ந்துவிடுவதுபோல் வாழ்க்கை முடிந்து விடும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாததால் தான் இறைவன் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து விடுகிறது. இறப்பு வீட்டிற்குச் செல்லும் போது தன்னை சிறிது நேரமாவது உணர முடியும்.
   
 
ஓவ்வொரு மனிதரும் உடல், மனம் படும் துன்பத்தை தனியாகத் தான் அனுபவித்து அதை ஏற்க வேண்டியிருக்கும். உள்ளத்தில் இறைவனை வைத்து போற்ற துன்பம் விரைவில் அனுபவமாக மாறி பிறகு அது இன்பத்தை கொடுக்கும். Film, battery உள்ள கேமெராவில் தான் படம் எடுக்க முடியும். அதைப் போன்று உணர்வு உள்ள மனிதனால் தான் மானசீகமாக கோயிலை தனது உள்ளத்தில் கொண்டு வந்து அவ்வப்போது வணங்க முடியும். அப்படி வணங்கி வருபவர்களுக்கு இறைவன் குரு, சற்குரு வடிவாக அருள் ஆசி வழங்குவார். இவர்கள் எல்லா நன்மையும் பெறுவார்கள்.
   
  "மெளனத்துக்கு நிகரான நண்பன் கிடையாது.
மெளனம் என்னும் நண்பன் ஒரு நாளும் நம்பிக்கை துரோகம் செய்யான்."
   
 
பொதுவாக ஒரு கோயிலுக்குச் சென்றால் அந்தக் கோயிலை முழுமையாகச் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு இடத்தில் மெளனமாக அமர்ந்து அந்தக் கோயிலையே மனதில் கொண்டு வந்து அங்கே இறைவனை வழிபட வேண்டும்.
   
 
இவ்வாறு செய்து பாருங்கள், தெளிவும் உயர்வும், மனதில் சுகமும் பெறுவீர்கள். எதுவும் முடியாது, நேரமில்லை என்று கூறாதீர்கள். முயன்றால் முடியும். முயற்சியே இல்லாவிட்டால் எப்படி வெற்றி பெறுவது?
   
  "உங்கள் உடல் - ஓர் ஆலயம்
உங்கள் உள்ளம் மூளை - பகவான் அறிவாக இருக்கும் இடம் இதுவே மூலஸ்தானம்
உஙள் மனம் - மந்திரம் கூறி பூஜை செய்யும் குருக்கள்".
   
 
உங்கள் உடல் ஆலயமாகவும், உங்கள் உள்ளம் மூலஸ்தனமாகவும், உங்கள் மனம் மந்திரம் கூறி பூஜை செய்யும் பூசாரியான குருக்களாகவும் இருக்க வேண்டும். இதை பலர் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் வரலாற்றுப்பூர்வமான, ஆதாரமான செய்தி நமக்கு வழிகோலாகவும், நம்பிக்கையாகவும் இருக்குமில்லையா ?
   
 
"மக்கள் நிலையற்ற பொருளிலேயே பெரும்பாலும் நாட்டத்தை செலுத்துகின்றனர். ஆனால், திடீரென முடிவு வந்து ஒரே கணத்தில் அதை அடித்துக் கொண்டு போகிறது. எரிகின்ற விளக்கை கவனிப்பதற்கு நியமிக்கப்பெற்ற குருடனைப் போல் மக்கள் உலக இன்பங்களை நாடி ஓடுகிறார்கள். ஞானிகள் உலக இன்பங்கள் அழியும் தன்மை உள்ளவை என்பதை உணர்ந்து துக்கச் சூழலில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்" என்று புத்தபிரான் கூறியது போல் உணர்ந்து வாழ்ந்தவர் பூசலார் ஆவார்.
   
 
ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவன் ஒர் அற்புதமான கலை நுட்பம் வாய்ந்த கோயிலை கயிலாய நாதருக்காக கட்டிக் கொண்டிருந்தார்.
   
 
கோயில் கட்டுவதற்கு ஏராளமாக செலவிடப்பட்டன. மன்னனுடைய அனைத்து சக்தியும் இதற்க்கு பயன்படுத்தப்பட்டன.
   
 
ராஜசிம்ம பல்லவன் கோயில் கட்டும் அதே தருணத்தில் சிவயோகி ஒருவர் கோயில் கட்ட நினைத்தார். அந்த சிவயோகி பெயர்தான் பூசலார். சென்னைக்கு அருகில் உள்ள திருனின்றவூரில் வாழ்ந்து வந்தார்.
   
 
தான் வாழ்ந்து வரும் ஊரில் மக்கள் பகவானை வழிபட நல்லதொரு கோயில் அமைக்க வேண்டும் என்று எண்ணி பலரிடம் பண உதவி கேட்டுச் சென்றார். ஆனால் மக்கள் இவரை நம்பி நிதி உதவி செய்ய முன்வரவில்லை.
   
 
சிவ பக்தனான பூசலார் தனது மன உறுதியால் மரத்தடியில் அமைதியாக அமர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார். பூமியில் ஒரு கற்கோயிலை எழுப்ப இயலாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் எனது உள்ளத்தில் பொற்கோயிலை எழுப்புவேன் என தியானத்தில் அமர்ந்தார்.
   
  ஒரு நல்ல நாளில் சாஸ்திர, வாஸ்த்து முறைப்படி வரைபடம் போட்டு அதன் படியே அஸ்திவாரம் போட்டு கட்டிடத்தை எழுப்பினார். ஒரு நிஜக்கோயில் அன்றாடம் உருவாவதுபோல் தன் மனக்கோயிலை எழுப்பிக் கொண்டிருந்தார்.
   
  எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்யவும்,   எதற்கும் எப்போழுதும் ஆயத்தமாக இருப்பதும்,  வெற்றி வாழ்வின் ரகசியம்.
   
 
-என்ற தத்துவத்தை அறிந்து பூசலார் தனது முயற்சியில் தளர்ச்சியில்லாது மனக்கோயிலை ரொம்பத் தீவிரமாக கட்டிக் கொண்டே வந்தார்.
   
 
தனது மனக்கோயில், உண்மையாக வெளியில் கட்டப்பட்டிருக்கும் கோயிலில் உள்ளதுபோல் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் அற்புதமாக உருவாக்கினார். அதோடு நந்தி மண்டபம், பலிபீடம் போன்றவைகளும் சிறப்பாக அமைத்துவிட்டார். பார்ப்பவர் கைகூப்பித் தொழும் ராஜ கோபுரம் வான் தழுவி நிறுத்தினார். மற்ற கோபுரங்களின் மாட முகப்புகளிலும் காவிய சம்பவங்களும், புராணக் காட்சிகளும் சிற்பக் கலையின் வாயிலாக வடித்தார். கோயிலைச் சுற்றி மதிற்சுவர் எழுப்பி, திக்குதோறும் காவல் ரிஷபங்களும் பூதகணங்களும் அமைந்தார். கருவறையில் சிவலிங்கத்தையும் அமைத்து விட்டார். கும்பாபிஷேகம் நடத்த வேண்டியது மட்டும்தான் பாக்கியிருந்தது. அதற்கும் அவராகவே நல்ல நாள் குறித்துவிட்டார்.
   
 
இதேபோன்று ராஜசிம்மன் கயிலாயனாதருக்கு பெரிய அற்புத கோயிலை எழுப்பிவிட்டு ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அரசனும் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்திருந்தான். அவன் கனவில் பகவான் சூரிய ஒளிப்பிரகாசமாகத் தோன்றி அருள் பிரகாசமாகக் காட்சியளித்தார். 'ராஜசிம்மா, நீ கும்பாபிஷேகத்திற்குத் தேர்ந்தெடுத்துள்ள நல்ல நாளின் போது, நமது பூசலார் திருனின்றவூரில் கட்டியுள்ள ஆலயத்தில் எழுந்தருள வேண்டும். இதனால் அந்த தேதியை சிறந்த பக்தனான பூசலார்க்கு விட்டுக் கொடு. வேறு வரும் சுபமுகூர்த்தத்தில் உன் ஆலய கும்பாபிஷேகம் நடக்கட்டும்' - என்றார். திடிரென பயந்து அழுந்து அரசன், 'இது என்ன அதிசயம் இறைவனே பிரசன்னமாகி இப்படிச் சொல்கிறாரே!' என்று குழம்பி நின்றான். யார் அந்த பூசலார்? என்னைவிட ஆற்றலும், பக்தியும் கொண்டவரா? அவர் எப்படிப்பட்ட ஆலயம் எழுப்பியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும் என்று புலம்பிக் கொண்டு புறப்பட்டான்.
   
 
திருனின்றவூரில் விசாரித்ததில் புதிதாக ஓர் ஆலயம் கட்டப்படவில்லை என்று ஊர்ஜீதமாயிற்று. ஒருவருக்கும் தெரியவில்லை. அந்தக் கோயில் அங்குதான் கட்டப்பட்டிருக்கிறது என்று புலம்பிக் கொண்டிருந்தான். 'என்னிடம் வந்து சொன்னது இறைவனல்லவா! அது எப்படிப் பொய்யாகும்?' என்று அரசன் பினாத்திக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்தான். ஆனால் அந்த நேரத்தில் ஒருவர் 'மன்னா, நீ தேடி வந்தவர் அந்த குளத்தங்கரை மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஆண்டி. அந்த ஆள் பேர்தான் பூசலார். புத்தி சரியில்லாததுபோல் உட்கார்ந்திருப்பார்' என்று கூறினார்.
   
 
அரசன் அங்கு சென்றான். அந்த மரத்தடியில் பூசலார் யோக நிலையில் இருந்தார். உடனே அவரை எழுப்பி "சுவாமி! தாங்கள் இறைவனுக்கு கோயில் கட்டியிருக்கிறீர்களாமே - அது எங்குள்ளது?" என்று கேட்டான். பூசலார் கண் திறந்து பார்த்தார். முகத்தில் புன்முறுவலுடன் 'அரசே! ஏன் பதட்டப்படுகிறாய்? நான் கோயில் கட்டுவது உண்மைதான், நீ நினைப்பதுபோல் பூமியில் இல்ல. இதோ என் உள்ளத்தில் கட்டி வருகிறேன். சாஸ்திர முறைப்படி அமைந்துள்ள ஆலயம் இது. உச்சியில் தங்க கலசங்களும் வைத்து முடிந்தது. இப்போழுது யாகசாலையில் பூஜை நடக்கிறது. இனி கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது. நல்லது அரசனாகிய நீயும் வந்து விட்டாய். இருந்து தரிசனம் செய்து விட்டுப் போ' என்று கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
   
 
அரசன் மெய்சிலிர்த்துப் போய் பூசலாரின் காலில் விழுந்து வணங்கினான்.எனது கனவில் பகவான் தோன்றி இட்ட கட்டளையை உணர்ந்து விட்டேன். நடக்கட்டும் பூசலாரே! தாங்கள் எழுப்பிய உள்ளக் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கட்டும்!.நான் கோடி கோடியாய் செலவு செய்த கோயில் கும்பாபிஷேகம் நிற்க, பகவான் உன் இதயக் கோயிலில் அல்லவா எழுந்தருளிருக்கிறார்! பூசலாரே நீங்கள் தான் கொடுத்து வைத்தவர். எனது கற்கோயிலை விட உனது உள்ளப் பொற்கோயிலே உண்மையானது" என்று கூறி அரசன் பிரமித்துப் போய் உண்மையை உணர்ந்து நின்றான்.
   
  " எண்ணங்கள் கருத்துக்கள் உலகை ஆட்சி செய்கின்றன.
உலகாதாய உணர்வை விட உள்ளம் சார்ந்த
உணர்வே ஆற்றல் படைத்த வீரம்"


என்ற பொன்மொழிக்கிணங்க அன்று பூசலார் மனக்கோயில் கட்டிய மாணிக்கமாகத் திகழ்ந்தார்.
   
 
அவர் காட்டிய நல்வழியை நாம் ஒவ்வொருவரும் மிக எளிதில் மனக்கோயில் கட்டி இறைவனோடு கலந்துறவாடலாம். முடியாது என்று கூறாதீர்கள்.
   
  "மனம் துணிந்தால்
மார்க்கம் வெற்றி"